நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக இருப்பது மருத்துவம் சார்ந்த செலவு. இன்றைய காலங்களில் மருத்துவ செலவு என்பது மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில், இதற்காக அரசு பல இலவசங்கள் மற்றும் நன்மை திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், மருத்துவ செலவுகளுக்கு மருத்துவ காப்பீட்டை அரசு வழங்கி வருகிறது. ஆயுஷ் மான் பாரத் யோஜனா மருத்துவ சேவைக்கான திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்துக்காக ஆண்டுக்கு 8000 கோடி ரூபாய்க்கும் மேலாக மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக மத்திய அரசால் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நன்மைகள் மத்திய அரசு வழங்கும் மருத்துவ காப்பீடான இந்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 5 லட்ச ரூபாய் வரைக்கும் மருத்துவ சேவைகளைப் பெற முடியும். அதேபோல், தமிழகத்தின் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் ஆயுஷ்மான திட்டமும் இணைத்து செயல்படுத்தப்படுகிறது. இதில், 1354 சிகிச்சை திட்டங்கள் மற்றும் பல நவீன சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. அத்துடன் 17000 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா முழுவதிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சேவையைப் பெற முடியும். பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை, மன ஆரோக்கியம் தொடங்கி இதய அறுவை சிகிச்சைகள் வரை பல்வேறு நவீன சிகிச்சைகளையும் இந்த திட்டத்தின்கீழ் பெற முடியும்.